1.5. செய்தி எண்ணக்கருவை சமர்ப்பித்தல்


உங்களது பிரசுர நிறுவனம் உங்களை ஒரு செய்தியை வழங்கும்படி பணித்திருக்கும் பட்சத்தில் அனைத்து திட்டமிடல்களும் முதலாவது படிநிலையில் விளக்கப்பட்டதைப் போல் மேற்கொள்ளப்படலாம். எனினும் நீங்கள் ஒரு தன்முயற்சி (Freelance) ஊடகவியலாளர் ஆயின் உங்களது ஆசிரியரைத் திருப்திப் படுத்தும் விதத்தில் செய்தி எண்ணக்கருவை உருவாக்க வேண்டும். ஒரு செய்தி எண்ணக்கரு என்பது உங்களது செய்திக்கதை என்ன என்பதை சமர்ப்பிப்பதுடன் உங்களது ஆசிரியரை அதன்பால் ஆர்வமூட்டி அதனை கொண்டு செல்ல மேற்கொள்ளப்படும் முயற்சி பற்றியதாகும். செய்தி எண்ணக்கரு ஒன்று பின்வரும் பகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.

  • மீள்வடிவமைக்கப்பட்ட செய்திச் சுருக்கம்
  • குறித்த செய்தி இந்தப் பத்திரிகை அல்லது வாசகர் வட்டத்துக்கு ஏன் பொருத்தமானது
  • அணுகுமுறை மற்றும் முறைமை பற்றிய சுருக்கமான விளக்கம்
  • கால அட்டவணை
  • பாதீடு

சில ஊடக நிறுவனங்கள் குறித்த செய்தி படங்கள் மற்றும் வரைபடங்கள் அடங்கலாக எவ்வாறு பதிப்பகம் அதை வாசகர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பது தொடர்பான கலந்துரையாடலிலும் நீங்கள் பங்களிக்க வேண்டும் என எதிர்பார்க்கும். வேறு சில ஊடக நிறுவனங்கள் அந்தப் பொறுப்புகளை வடிவமைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பில் விட்டு விடுகின்றன. எந்த விதத்திலும், உங்களது செய்தியை ஊடக நிறுவனம் விரும்பாமல் போகலாம் என்பதை கருத்தில் கொள்க. இந்தக் காரணத்துக்காக உங்களது செய்தி எண்ணக்கரு சமர்ப்பணத்தை மிகவும் முக்கிய தேவை உள்ள தகவல்கள் மாத்திரம் கொண்டதாக அத்துடன் உங்களது புலனாய்வின் மிக முக்கிய கண்டுபிடிப்புகளை உள்ளடக்கதக்கதாக அமைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் செய்தி எண்ணக்கருவை வேறொரு செய்தி அறைக்கு சமர்ப்பிக்க கூடியதாக அமையும்.