உறுதியான யோசனை ஒன்றை உருவாக்கிய பின்னர், கருதுகோள் ஒன்று உருவாக்கப்பட்ட பின்னர் புலனாய்வு அறிக்கையிடல் தொடர் செயற்பாட்டின் அடுத்த கட்டம் மூலங்களை வரைபடமிடுவதாகும். நீங்கள் இந்த செய்தியின் முக்கிய இயங்குனர்கள் யார் என அடையாளம் காண்பதுடன் அவர்களின் நடவடிக்கைகைகளை பதிவு செய்த ஆவணங்கள் ஏதாவது உள்ளனவா என நோக்க வேண்டும். அரசாங்கம், வைத்தியசாலைப் பணியாளர்கள், கூட்டுத்தாபனங்கள், மாபியாக்கள் மற்றும் ஊழல் மிக்க அரசியல்வாதிகள் என்ன செய்கின்றனர் என்பதை அதிகமான பொதுப் பதிவுகள் காண்பிக்கின்றன. பல்வேறுபட்ட மூலங்கள் உங்களது எடுகோள்களை நிறுவவும் அத்துடன் உங்களது ஆரம்ப எடுகோளை சரிபார்க்க அல்லது பிழை எனக் கண்டறிய உதவும். ஒவ்வொரு விபரத்துக்கும் இரண்டு மூலங்கள் என்ற கொள்கையை எப்போதும் பயன்படுத்துங்கள், இதன் பொருள் ஒரே தகவலை உறுதி செய்ய இரண்டு சுயாதீன மூலங்களைப் பயன்படுத்துவது ஆகும். இந்த மூலங்களில் பின்புல வல்லுனர்களாக பயன்படும்; அவர்களது தொடர்பாடலுக்கான தகவல்களை உங்களது முகவரிப் புத்தகத்தில் குறித்து வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த மூலங்கள் முதல்நிலை அல்லது இரண்டாம் நிலை மூலங்களாக இருக்கலாம்.
முதல் நிலை மூலங்கள்: இவை புதிய சான்றுகளைத் தரும் அல்லது நேரடி அனுபவம் ஒன்றைத் தொடர்பு படுத்தும் மூலங்களாகும். உதாரணமாக வைத்தியசாலையின் பின்கதவு வழியாக மருந்துகளை தாதி ஒருவரிடம் இருந்து விலைக்கு வாங்கும் நபர் ஒருவர் முதல் நிலை மூலமாகும். குறித்த நபரால் அந்த அனுபவத்தை எமக்கு கூற முடியும், எனினும் அவரால் தாதிகள் மறைவாக என்ன செய்கிறார்கள் என சான்றுறுதிப் படுத்த முடியாது. தண்ணீர் சுத்தகரிப்பு இயந்திரத்தில் தண்ணீரின் சுத்தத்தை வாரத்துக்கு ஒரு தடவை மேற்கொள்ளாது மாதத்துக்கு ஒரு தடவை மேற்கொள்ளும்படி பணிக்கப்பட்ட தொழிலாளர் குழுத் தலைவன் ஒரு முதல் நிலை மூலமாகும். அதே போல சர்வதேச ஆயுதக் கம்பனி ஒன்றிடம் இருந்து பெறப்பட்ட கொடுப்பனவு ஒன்றை தெளிவாகக் காண்பிக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரின் வங்கி கொடுக்கல் வாங்கல் பட்டியல் கூட முதல் நிலை மூலமாகும். முதல் நிலை மூலங்கள் – அவற்றை நீங்கள் சோதித்து அவை உண்மையானவை என உறுதி செய்யும் பட்சத்தில் – நேரடியான ஆதாரத்தை வழங்குவதால் மிகவும் பெறுமதி வாய்ந்த மூலங்களாகும். அனேகமாக அவை கண்டு பிடிப்பதற்கு மிகவும் சிரமமானவை. தொடர்புடைய அனுபங்களைக் கொண்ட மக்கள் தாம் பலிக்கடாக்களாக ஆக்கப்படுவோம் என அஞ்சுவதால் அவற்றை பதிவு செய்ய மறுக்கக் கூடும். அதே போல் வங்கி மற்றும் வைத்தியசாலை ஆவணங்கள் போன்ற முதல்நிலை ஆவண மூலங்கள் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது அவை அந்தரங்க சட்டங்கள் மூலம் தடுக்கப்படலாம்.
இரண்டாம் நிலை அல்லது துணை மூலங்கள்: இரண்டாம் நிலை மூலங்களில் நிறுவனங்களின் அறிக்கைகள் மற்றும் இரண்டாம் தரப்பு அனுபவங்களும் (“எனக்கு ஒரு நண்பர் உண்டு, அவர்…”) உள்ளிட்ட அனைத்து வெளியிடப்பட்ட ஆவணங்களும் உள்ளடங்குகின்றன. இரண்டாம் நிலை மூலங்களும் பெறுமதி மிக்கவை, குறிப்பாக அவை சூழமைவு மற்றும் பின்புலம் என்பவற்றை உருவாக்குவதிலும் சிறந்த தொடர்புகலை நோக்கி எம்மை நகர்த்தவும் உதவுகின்றன. எவ்வாறாயினும், அவற்றிடம் இருந்து பெறப்படும் எந்தச் சான்றும் – அத்துடன் அவை உருவாகும் நபர் உட்பட – சோதிக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்.
மேலதிகமாக, மூலங்கள் மனித, ஆவண, இலத்திரனியல் (digital) மற்றும் சனக் கூட்ட மூலங்கள் என வேறுபடுத்தப்படலாம்.
(a) மனித மூலங்கள்:அதிகமான மூலங்கள் இந்த வகைக்குள் அடங்குகின்றன: நேரடி வகிபாகங்களைக் கொண்டோர், கண்ணால் கண்ட சாட்சிகள், வல்லுனர்கள் மற்றும் நலன் கொண்ட குழுக்கள், ஆவலுள்ளோர் மற்றும் பிடிவாதமுள்ளோர் என்பன இவ்வகை மூலத்தில் உள்ளடங்குகின்றனர். எனினும் நீங்கள் அணுகும் நபர்களின் நிலை, நம்பகத் தன்மை மற்றும் நோக்கங்கள் தொடர்பில் உறுதியாக இருங்கள். நீங்கள் நீர்வழங்கல் தனியார் மயமான செய்தி தொடர்பில் பணியாற்றிக் கொண்டிருந்தால் தனியார் மயமாதலை எதிர்க்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உங்களுக்கு அதிகளவான தகவல்கள் மற்றும் எதிர்க் குழாம் பற்றிய கடுமையான கருத்துக்களை உங்களுக்கு வழங்குவார்கள். எனினும் அந்தத் தகவல்கள் குறிப்பிட்ட நிலைப்பாட்டில் இருந்தே உங்களை வந்தடைகின்றது, அத்துடன் நிறுவனங்களின் பிரதிநிதிகள் அதி கூடிய மக்கள் குழுக்களின் சார்பாகவே பேசுகின்றனர். அவர்கள் குழுவின் நிலைப்பாடுகளை சுருக்கமாக வழங்கும் போது அவர்கள் சமூகத்தின் கருத்துக்களை மாற்றி, தவிர்த்து அல்லது திரிபு படுத்தி ஒழுங்குபடுத்தி உங்களுக்கு வழங்கக் கூடும். சில வேளைகளில் இது வேண்டுமென்றே செய்யப்பட்டிருக்கலாம். எனவே, நீங்கள் பல நோக்குப் புள்ளிகளைத் தேட வேண்டும். ஒரு சமூகத்தின் மக்களுடன் நீங்கள் பேசும் போது, தேர்ந்தெடுக்கப்படும் குரல்கள் அனைத்து சனத்தொகைப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். அந்தக் குரல்களில் பெண்கள், ஆண்கள், இளையோர், முதியோர், அத்துடன் வேறுபட்ட வருமானம் மற்றும் நலன் கொண்ட குழுக்களும் உள்ளடங்கியிருக்க வேண்டும். மனிதக் குரல்கள் உங்களது செய்திக்கு உண்மைத்தன்மைய வழங்குவதோடு அதை உயிர்ப்புள்ளதாகவும் மாற்றும்; எனவே ஒரு போதும் காகித அல்லது இலத்திரனியல் மூலங்களில் மாத்திரம் தங்கியிருக்க வேண்டும்.
(b) காகித மூலங்கள்: புத்தகங்கள், செய்திப்பத்திரிகைகள் மற்றும் இதழ்கள், ஒப்பந்தங்கள் மற்றும் வங்கி கூற்றுகள் போன்ற உத்தியோக பூர்வ ஆவணங்கள் மற்றும் வர்த்தக ஆவணங்கள் என்பன இதில் உள்ளடங்க முடியும். இதில் “நரை நிற ஆவணங்கள்” அல்லது பிரசுரத்துக்கு உட்படாமல் பரந்த அளவில் பகிரப்படும் ஆவணங்களும் உள்ளடங்குகின்றன (உதாரணமாக தனியார் கம்பனிகளால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மற்றும் பட்டப்படிப்பு ஆய்வுக் கட்டுரைகள்) அல்லது உத்தியோகபூர்வமான இரகசிய ஆவணங்கள். அநேகமான சந்தர்ப்பங்களில் காகித மூலங்களே நீங்கள் தேடும் சான்றை வழங்குகின்றன. நாம் இதை காகித வழக்கை பின்தொடர்தல் என அழைப்போம்.
எனினும் புலனாய்வு ஊடகவியலாளர்கள் ஆவணச் சான்றைத் தேடும் போது பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். சிலவேளைகளில் சான்றுகள் இருப்பதை ஊடகவியலாளர் அறிந்திருப்பதில்லை அல்லது பொதுப் பதிவுகள் ஒழுங்கின்றிக் காணப்படுவதால் தேடுவது சிரமமாக இருக்கும். அல்லது ஊடகங்களுக்கு ஆவணத் தேடலை மேற்கொள்ள அனுமதிக்கும் கருத்துச் சுதந்திர சட்டங்கள் காணப்படாமல் இருக்கலாம். இங்கு காணப்படும் முக்கிய கரிசனை அதிகாரிகள் தகவல்கள் தமக்கு அல்லது அரசாங்கத்துக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம் என்ற பயத்தின் காரணமாக இந்த செயன்முறையை தடுக்க முயற்சிப்பர். புலனாய்வு அறிக்கையிடல் ஒன்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய ஆரம்ப ஆய்வுகளில் ஒன்று நீங்கள் மேற்கொண்டுள்ள புலனாய்வில் விடயத்தில் பயன்பாட்டில் உள்ள ஆவணங்கள் எவை, அவை எங்கே எவ்வாறு தரம் பிரித்தலுக்கு உட்படுத்தப்படுகின்றன அத்துடன் அவற்றை எவ்வாறு பெறலாம் போன்ற விடயங்களை ஆய்வு செய்வதாகும். முன் அனுமதிகள் ஏதும் தேவைப்படின் அவற்றைப் பெற சில வேளைகளில் வாரங்கள் மற்றும் மாதங்கள் தேவைப்படும் என்பதால் உங்களது ஆய்வின் ஆரம்பத்திலேயே அவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும். காகித மூலங்களை தவிர்க்க வேண்டாம்: பட்டியல்கள் மற்றும் தொலைபேசி புத்தகங்கள் போன்றனவும் காகித மூலங்களில் உள்ளடங்குகின்றன.
பிரபல அமெரிக்க புலனாய்வு நிருபர் பில் கெய்ன்ஸ் தனது வெற்றிக்கு அவரது ஆவண ஆய்வுத் திறனை காரணமாகக் கூறுகின்றார். “ஏனைய நிருபர்கள் தவற விடுகின்ற செய்திகளை பெற முடிவது நான் ஆவணங்களை கண்டு பிடிக்கக் கூடிய இடங்களுக்கு செல்வதனாலேயே ஆகும்” அத்துடன் அநேகமான சந்தர்ப்பங்களில் அவர் தேடும் விடயங்களை பொது ஆவணங்களில் இருந்தே கண்டு பிடிக்கிறாரே அன்றி இரகசிய ஆவணங்களில் இருந்து அல்ல. அவர் முக்கிய மூலம் ஒன்றின் முகவரியை சொத்து பதிவுகளைத் தேடுவதன் மூலம் பெற்று வியாபாரப் பதிவின் போது எழுதிய விடயம் ஒன்றின் மூலம் ஊழல் செய்த கம்பனியை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.
(c) இலத்திரனியல் (digital) மூலங்கள்: இதில் இணையத்தில் காணப்படும் தகவல்கள் மற்றும் டிஜிட்டல் முறை மூலம் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பதிவுகள் என்பன உள்ளடங்குகின்றன. இந்த மூலங்களில் தேடுவதற்கு அசாதாரண திறன்கள் எவையும் அவசியமில்லை. இணையத்தில் காணப்படும் தகவல்களின் அளவு வியக்கத்தக்கது எனினும், ஏனைய மூலங்களைப் போல் அங்கும் குறித்த தகவல் எங்கிருந்து வருகின்றது, அவற்றின் நம்பகத்தன்மை மற்றும் அவற்றின் சாத்தியமான நோக்கங்கள் என்பவை பற்றி சோதனை செய்ய வேண்டும். அதிகாரிகள் தம்மைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் அத்துடன் குடும்பம் மற்றும் நண்பர்கள் அவர்களை எவ்வாறு விபரிக்கின்றனர் என்பவை பற்றி நீங்கள் சோதனை செய்ய வேண்டும். எனினும் இணையம் சார்பளவில் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஏறத்தாழ இணைய வசதி கிடைக்கும் எவரும் எதையும் அங்கு பதிவிட முடியும் அத்துடன் இணையத் தகவல்கள் அங்கு நீண்ட காலம் நிலைத்திருக்கின்றன. சிலவேளைகளில் அவை காலத்துக்கு ஒவ்வாதவை ஆகினும் அங்கு காணப்படுகின்றன. எப்போதும் மிக அண்மையான மூலங்களை முதலில் சோதனை செய்யுங்கள். இது தொடர்பான மேலதிக உதவிக்கு ஐரோப்பிய ஊடகவியல் நிலையம் (EJC) பிரசுரித்த சரிபார்க்கை கைநூலின் (Verification Handbook) இன் இலவசப் பிரதியை பதிவிறக்கம் செய்யுங்கள். குறித்த கைநூலில் இலத்திரனியல் தகவல்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் கருவிகள், நுட்பங்கள் மற்றும் படிநிலை வாரியான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
(d) சனக்கூட்ட மூலங்கள்: இந்த புதிய கருவியில் மனித மற்றும் இலத்திரனியல் மூலங்கள் ஒன்றிணைக்கப்படுகின்றன. இங்கு ஊடக வெளிச் செலுத்துகைகள் வாசகர்களை செய்திகளை புலனாய்வு செய்ய வரவேற்று அவர்களை பங்களிக்க வைக்கின்றன.
அணுகுவதற்கு கடினமான தகவல் மூலங்களைப் பெற உங்களுக்கு உதவும் வகையில் சில சட்டங்கள் காணப்படலாம். இலங்கையின் 2016 ம் ஆண்டின் 12 ம் இலக்க தகவல் அறியும் இந்தியாவின் தகவல் உரிமைச்சட்டம், தென் ஆபிரிக்காவின் தகவல் அணுகல் மேம்பாட்டுச் சட்டம் மற்றும் சேர்பியாவின் பொது முக்கியத்துவத்துக்காக தகவல்களை சுதந்திரமாக அணுகுதல் சட்டம் என்பன இதற்கான உதாரணங்களாகும். ஒவ்வொரு நாட்டிலும் இந்த சட்டங்கள் பெயரில் வித்தியாசப் படுவது மாத்திரமன்றி உள்ளடக்கத்திலும் வித்தியாசங்களைக் கொண்டுள்ளன. இதன் காரணமாக சட்ட ஒழுங்குகள் பற்றிய உலகளாவிய ஆலோசனை ஒன்றை வழங்குவது கடினமானது. எனினும் ஒரு நாட்டில் நீங்கள் புலனாய்வை ஆரம்பிக்கும் முன்னர் அந்த நாட்டின் சட்டம் பற்றி சிறிது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.