1.4. பாதீடு (வரவு-செலவு திட்டம்)


உங்களது திட்டமிடலில் தேவைப்படும் ஏனைய முக்கிய மதிப்பீடுகளில் ஒன்று பாதீடாகும். குறித்த புலனாய்வுக்கு எவ்வளவு பணமும் வளங்களும் தேவைப்படும்? உங்களது பாதீடு உருவாக்கத்தின் போது பிரயாணச் செலவுகள், உணவு, தங்குமிடம் (உங்களது தகவல் மூலங்களை உபசரிப்பதையும் மேற்கொள்ள வேண்டி வரலாம்), துறை சார் ஆலோசனை வழங்குவோருக்கான, மொழி பெயர்ப்பாளர்களுக்கான, ஒலி நாடாக்களை ஆவணமாக்குவோருக்கான அல்லது சேவை வழங்குனர்களுக்கான கொடுப்பனவுகள், ஆவணங்களை தேடுவதற்கான செலவுகள் அல்லது நொத்தாரிசு ஒருவரால் ஆவணங்கள் சான்றளிக்கப்படல் கட்டணங்கள், தொடர்பாடல் செலவுகள் (தொலைபேசி மற்றும் இணையம்) மற்றும் புகைப்படச் செலவுகள் என்பன இதில் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய அலகுகளாகும். நீங்கள் குழு ஒன்றுடன் பணி புரியும் பட்சத்தில் குழு ஆளணி பற்றியும் (உதாரணமாக திட்ட முகாமையாளர்), பயிற்சிப் பட்டறைகள் மற்றும் களப்பயணங்கள் என்பனவும் உங்களது பாதீட்டில் உள்ளடக்கப்பட வேண்டும்.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் உள்ள அதிகமான ஊடக நிறுவனங்களின் பாதீடுகள் மிகவும் இறுக்கமானவை. ஐக்கிய அமெரிக்காவின் பாரிய செய்திப் பத்திரிகைகள் மேற்கொள்ளும் ஒரு புலனாய்வுத் திட்டத்துக்கான செலவு இவ்வாறான ஊடக நிறுவனம் ஒன்றை ஒரு வருடத்துக்கு நடத்திச் செல்ல போதுமானதாக இருக்கும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் வேறு நிதி மூலங்களை அடையாளம் காண நீங்கள் புத்தாக்கம் மிக்கவராக இருத்தல் வேண்டும். சர்வதேச கொடை நிறுவனங்கள் ஒரு சிறந்த ஆரம்பப் புள்ளியாக அமையும். சிலவேளைகளில் அவர்களின் விருப்புப் பகுதிகள் உங்களது புலனாய்வை ஒத்திருக்கக் கூடும். எனினும் கொடை வழங்குவோர் தமது முன்னுரிமை நிகழ்ச்சி நிரல் தொடர்பில் அழுத்தம் காண்பிப்பது பற்றி நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும். அவை உங்களுடைய விடயங்களைப் போல் அல்லாத பட்சத்தில் அவர்களின் நிதி ஆதரவைப் பெற்றுக் கொள்தல் தொடர்பில் உங்களது நேரத்தை விரயமாக்க வேண்டாம். நிதி திரட்டுவதற்கு உள்ள இன்னொரு வழி கூட்டநிதி ஆகும். பொதுவான ஊடக திட்டங்கள் அல்லது புலனாய்வு ஊடகத்துறை வெளியீடுகளுக்கு நிதி திரட்டுதல் பிரபலமாகி வருகின்றது, எனினும் அது கடினமானது.


சாத்தியமான புத்தாய்வு மாணவர் நிலை (fellowship) பற்றிய மேல்நோக்கு, கூட்ட நிதி பற்றிய மேலதிக தகவல்கள் மற்றும் வெற்றிகரமாக நிறைவடைந்த திட்டங்கள் தொடர்பான தகவல்கள் பின்வரும் இணையத்தளங்களில் பெறப்படலாம:


தகவல் மூலங்களுக்கு பணக் கொடுப்பனவு வழங்குவது சிறந்த யோசனை அல்ல என்பதை அதிகமான ஊடகவியலாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். கொடுப்பனவுகள் மீதான ஆசை மூலங்கள் பொய்களைக் கூறவும் விடயங்களை உருப்பெருக்கிக் கூறவும் ஊக்குவிக்கும். மிகவும் கெட்ட விடயமாக, கொடுப்பனவு வழங்கப்படுதல் எதிர்காலத்தில் தரப்பட்ட சான்றுகளின் நம்பகத் தன்மையைச் சிதைப்பதற்காக அல்லது ஆதாரங்களை சிதைக்கும் நோக்கில் மூலங்கள் தமக்கு பணம் வழங்கப்பட்டமை காரணமாகவே தகவல்களை வழங்கினோம் எனக் கூறக் கூடும். மேலதிகமாக செய்திகளுக்காக பணம் வழங்குவது உங்களது பிரசுரித்தல் ஒழுக்கம் மற்றும் புலனாய்வுத் திறன்கள் மீது சிறந்த பிரதிபலிப்பை வெளிக்காட்டாது. எவ்வாறெனினும்  சந்தர்ப்பங்களில் பத்திரிகை ஒன்று மூலங்கள் நேர்காணலுக்கு செலவிடும் நேரத்துக்கான கொடுப்பனவு, பிரயாணம் மற்றும் ஏனைய செலவுகளுக்கான கொடுப்பனவுகளை வழங்க முடியும். எனினும் இந்த சந்தர்ப்பங்களில் கூட இரு தரப்பினரும் எதற்காக பணம் வழங்கப் படுகின்றது என்பதில் தெளிவாக இருப்பதோடு செலவுகளுக்கு குறைந்த சாதாரண வீதங்களிலேயே கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மூலங்கள் தகவல்களை வழங்குவதன் மூலம் உங்களுக்கு அல்லது உங்கள் பத்திரிகைக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை மாறாக பாரிய அளவில் பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு தகவல்களை வழங்குவதன் மூலம் நன்மை புரின்கின்றன என்பதை மூலங்களுக்கு நினைவூட்ட வேண்டும்.

அணுகுதலை பெறும் நோக்கில் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் வழங்குவது கூட களங்கம் விளைவிக்கக் கூடியது. எனினும், சில சமூகங்களில் அதிகாரிகள் தமது அலுவலகங்களை காலையில் திறப்பது உட்பட எதைச் செய்ய வேண்டுமானாலும் சிறு உதவிகளை (மதுபானம், குளிர்பானம் போன்றன) அவ்வாறான சூழலில் அரச இயந்திரத்துக்கு எண்ணெய் இடாமல் உங்களால் எதுவும் செய்ய முடியாதிருக்கும். இருந்தும், இந்த சிறு கொடுப்பனவுகள் மூலம் உங்களின் ஒட்டு மொத்த புலனாய்வு நடவடிக்கையே அபாய நேரிடருக்கு உட்படுகின்றது. எவ்வளவு சிறுதொகையாக மற்றும் வழமையானதாக இருந்த போதும் அவற்றை அதிகாரிகள் தமது மேலாளர்களுக்கு அல்லது போட்டி ஊடகத்துக்கு நீங்கள் பணம் வழங்கியதாகக் கூறும் பட்சத்தில் அவை இலஞ்சமாகவே கருதப்படும். இவ்வாறான கோரல்களின் போது அவற்றைக் கையாள மூலோபாயங்களை நீங்கள் உருவாக்க வேண்டும்: ஒவ்வொன்றையும் அவற்றின் சூழ்நிலைகளுடன் தொடர்பு படுத்தி சிந்தியுங்கள் – எதிர்காலத்தில் அது சவாலுக்கு உட்படுத்தப்பட்டால் உங்களது செயலை உங்களால் நியாயப்படுத்த (மிக முக்கியமாக உங்களது வாசகர்களுக்கு) முடியுமா? உங்களது பணியின் முக்கியத்துவத்தை விளக்கி மற்றும் நேச அணிகளை உருவாக்குவதன் மூலம் மூலங்களின் ஒத்துழைப்பை பெறுவது எப்போதும் சிறப்பானதாகும்.