3. குழாம் ஒன்றை எவ்வாறு கட்டி எழுப்புவது?

3. குழாம் ஒன்றை எவ்வாறு கட்டி எழுப்புவது?


நீங்கள் செய்தி ஒன்றை ஒரு குழாமாக புலனாய்வு செய்ய தீர்மானித்தால் மேலதிக படிநிலைகள் சில திட்டமிடப்பட வேண்டும்: இதில் முதலாவது விடயம் திட்ட முகாமையாளரைத் தீர்மானித்தல் ஆகும். இந்த நபர் மிகவும் முக்கியமான அலகாகும். ஏனெனில் அவர் அல்லது அவள் குழாத்தின் அனைத்து உறுப்பினர்களிடம் இருந்தும் போதிய மற்றும் தொடர்புடைய உள்ளீடுகள் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வதோடு அவை அனைத்தையும் ஒன்றாக இணைக்க வேண்டும். இதன் இரண்டாவது படிநிலை ஒட்டு மொத்த குழாமும் விடயதானம் மற்றும் தெளிவான ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றிய சிந்தனைக் கிளறளை ஏற்படுத்த பயிற்சிப் பட்டறை ஒன்று முன்னெடுக்க வேண்டும். இந்த தொடர் செயன்முறைக்கான வடிவம் பற்றியும் நீங்கள் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்

  • எப்பொழுது, எவ்வாறு குழாம் உறுப்பினர்கள் இணைந்து தொடர்பு கொள்வது?
  • எப்பொழுது, எவ்வாறு மற்றும் என்ன இடைவெளியில் திட்ட முகாமையாளர் தொடர்பு கொள்வார்?
  • புலனாய்வு தொடர் செயன்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் மட்டறுப்பதற்கான, மீட்டுவதற்கான, பின்னூட்டத்துக்கான மற்றும் திருத்துவதற்கான தொடர் செயன்முறை என்ன?
  • தேவையான உள்ளீடுகள் கிடைக்கப் பெறாத பட்சத்தில் எவ்வாறு பிரச்னையை தீர்ப்பது?
  • இறுதி முடிவுகளில் அனைவரையும் ஒத்திசைய வைப்பது எவ்வாறு?
  • என்ன செலவுகளுக்கான பணம் மீள வழங்கப்படும்?
  • குழாம் உளவு வேளைகளில் ஈடுபடுமா? அடையாளங்களை மறைத்து பணிபுரியுமா? தேவையேற்படின் ஆவணங்களை பெற கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படுமா?

மேலதிகமாக, வகிபாகங்கள் தெளிவாக வரையறுக்கப்படுமிடத்து விருப்புகளின் மோதல்கள் (Conflicts of interest) தவிர்க்கப்படலாம். குழாம் உறுப்பினர் ஒருவர் சபை உறுப்பினராக இருக்கும் பட்சத்தில் அவர் குழாத்தின் புலனாய்வு பற்றிய சபை முடிவுகளில் இருந்து தாமாக விலகிக் கொள்ள வேண்டும். அத்துடன் திட்ட முகாமையாளரின் நிறுவன தலைமையுடனான உறவு மற்றும் தீர்மானம் மேற்கொள்ளல் என்பன தெளிவாக உருவாக்கப்பட வேண்டும். திட்ட முகாமையாளர் மற்றும் தலைமை இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதுடன் திட்ட முகாமையாளர் மற்றும் குழாம் உறுப்பினர்கள் தலைமைத்துவம் இடையேயும் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட வேண்டும்.

இந்த ஒழுங்கமைப்பு படிமுறைகளுக்கு மேலதிகமாக குழாம் ஒன்று விடயதானத்துடன் பரிச்சியமாக வேண்டும்: விடயதானத்தையும் அதன் சுற்றுப் புறத்தையும் மற்றும் புலனாய்வைச் சூழ உள்ள கேள்விகளையும் குழாமின் அனைத்து உறுப்பினர்களும் விளங்கிக் கொண்டுள்ளனரா? பொது மக்கள் உறுப்பினர்களாக குழாமின் உறுப்பினர்களுக்கு இந்த விடயத்தில் உள்ள நலன்கள் எவை? இந்த பயிற்சிப்பட்டறையில் சிறந்த புலனாய்வுப் பணியை மீட்டுவது முக்கியமானது; இது முடிவின் தரத்தைத் தீர்மானிக்கும். சிறந்த நடவடிக்கைகள் மற்றும் ஒழுக்கம் என்பன இந்த கலந்துரையாடலின் பகுதிகளாக அமைய வேண்டும். இது தொடர்பில் ஆரம்ப கருதுகோள் ஒன்று உருவாக்கப்படுவதுடன் தேவையான பின்புலத் தகவல்கள் மற்றும் மூலங்கள் பற்றிய மேற்கொள்ள வேண்டிய விடயங்களின் பட்டியல் ஒன்றும் தயாரிக்கப்பட வேண்டும்.

புலனாய்வு தொடர் செயன்முறையின் போது விடயத்தின் வாழ்திறன், மற்றும் எட்டப்படக் கூடிய நோக்கங்கள் தொடர்பில் திட்ட முகாமையாளர் தீர்மானிக்க வேண்டும்; பணிபுரியும் எடுகோள் மீள் பரிசீலிக்கப்படல், (புதிய) மூலங்கள் அடையாளப்படுத்தப்படல் மற்றும் திருத்தப்பட்ட மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் பட்டியல் என்பன குழாம் உறுப்பினர்களுடன் தொடர்பாடலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். திட்ட முகாமையாளர் திட்டத்தின் வெளியீடாக ஒரு ஆகக் குறைந்த செய்தியை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். ஆகக் குறைந்த செய்தி என்பது ஆகக் குறைந்தது உள்ளூர் பிரச்சனை தொடர்பில் பொதுமக்களின் புரிதலை விரிவாக்குவதாகும். குழாமின் கோரிக்கைக்கு ஏற்ப அல்லது தனது சொந்த முன்னெடுப்பின் மூலமாக திட்ட முகாமையாளர் குழாம் மத்தியில் அணுகப்பட்ட துறைசார் வல்லுமை மற்றும் குழாமின் முன்னேற்றம் தொடர்பில் ஒத்திசைந்து அதிக வெளியீட்டை வழங்கும் வகையில் தொடர்பாடலுக்கு உட்படுத்த வேண்டும். மேலதிகமாக, திட்ட முகாமையாளர் வேறுபட்ட குழாம் உறுப்பினர்களின் உள்ளீடுகளை எவ்வாறு பாவிப்பது என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்.


ஸ்பொட்லைட்

ஸ்பொட்லைட் குழாமின் கண்டுபிடிப்புகள் பிராந்திய ஒற்றை செய்தி அறை குழாமின் பணிகளுக்கு சிறந்த உதாரணமாகும்.

கடந்த 2002 ஆம் ஆண்டு பொஸ்டன் குளோப் என்ற பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் பொஸ்டன் பிசப் எல்லைக்குள் பல கார்டினல்கள் மற்றும் பிசப்கள் பாதிரியார்களின் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களை மறைத்து வருவதைக் கண்டறிந்தனர் ஐக்கிய அமெர்க்காவில் அவர்களின் அறிக்கை வெளியிடப் பட்ட பின்னர் ஏனைய ஊடகங்கள் தமது பிராந்தியம் மற்றும் நாடுகளில் இடம்பெறும் அவ்வாறான சம்பவங்களை வெளிக் கொண்டுவர ஆரம்பித்தன.

குறித்த புலனாய்வு கடந்த 2015 ஆம் ஆண்டு ஸ்பொட்லைட் என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

VS.

பனாமாக் காகிதங்கள்

பாரிய அளவிலான சர்வதேச புலனாய்வு ஊடக ஒத்துழைப்புக்கு பனாமாக் காகிதங்கள் என்பது சிறந்த உதாரணமாகும்.

70 நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 400 ஊடகவியலாளர்கள் ஒரு குழாமாக பனாமா நாட்டின் சட்ட நிறுவனம் ஒன்றின் ஆவணக் கசிவுகளை புலனாய்வு செய்தனர். இறுதியாக பல அரசியல்வாதிகள், மெய்வல்லுனர் விளையாட்டு வீரர்கள், குற்றவாளிகள் மற்றும் ஏனையோர் சட்ட விரோத நோக்கங்களுக்காக வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை பாவித்ததை அவர்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர்.

இதன் போது 11 மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. தனி ஒரு ஊடகவியலாளரால் இதை ஒரு போதும் மேற்கொண்டிருக்க முடியாது. இந்த உதாரணம் குழாமின் அளவு தகவலின் அளவு மற்றும் ஈடுபடும் ஊடகவியலாளர்களில் தங்கியுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.  இறுதியாக மிகப் பெரிய நிதி மோசடிகளில் ஒன்றான பனாமாக் காகிதங்கள் விவகாரம் வேறுபட்ட ஊடகங்கள் மற்றும் மொழிகளில் உலகளாவிய ரீதியில் 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.


இதுவரை நீங்கள், எடுகோள் ஒன்றை உருவாக்கி உங்களது செய்தியை புலனாய்வு செய்வதற்கான திட்டம் ஒன்றையும் வரைந்துள்ளீர்கள். தற்பொழுது நீங்கள் உண்மையான ஆய்வுத் தொடர் செயன்முறையை ஆரம்பிக்க தயாராக இருப்பீர்கள். அடுத்த அத்தியாயம் பல்வேறு பட்ட ஆய்வு உத்திகள் மற்றும் உங்களது சொந்த தகவல் தளத்தை உருவாக்குவது எவ்வாறு என்ற விடயங்களை விளக்கும்.