புலனாய்வு ஊடகவியலாளர் ஒருவருக்கு மூலங்களைக் கண்டறிதல், உருவாக்குதல் மற்றும் பேணி வருதல் என்பன முக்கியமான விடயங்களாகும். மிகவும் முக்கியமான, நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் தெளிவான மூலங்களாக அமைவன வழமையாக சாட்சிகள், முதல்நிலை அனுபவங்களைக் கொண்டோர் அல்லது குறித்த விடயத்துடன் நேரடியாக ஈடுபட்டவர்கள் ஆகும். சம்பவம் நடைபெற்ற இடத்தில் காணப்பட்ட நபர்களின் பெயர்களைத் தொகுத்தல் அல்லது நீங்கள் குறித்த இடத்தில் இருக்கும் போது காணப்படும் நபர்களை அணுகுவதன் மூலம் சாட்சிகளை நீங்கள் அடையாளம் காண முடியும். நபர்கள் தாம் அங்கு இருந்தோம் எனக் கூறும் போது அவர்கள் அங்கு இருந்தனரா என நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். சாட்சி ஒருவர் சம்பத்துடன் நேரடி அனுபவம் கொண்டிருக்கும் பட்சத்தில் குறித்த ஆண் அல்லது பெண் உங்களின் விலைமதிக்க முடியாத சொத்தாக அமைவார். நீங்கள் சம்பவ இடத்தில் அவதானித்த விடயங்களை அறிக்கையிடும் வேளை, நீங்களும் ஒரு முக்கிய சாட்சியாக மாறுகின்றீர்கள்.
அத்துடன் நீங்கள் எழுதும் ஒவ்வொரு செய்தியும் உங்களது வலைப்பின்னலின் பரப்பெல்லையை விஸ்தரிக்க வேண்டும். அனேகமாக, இது நீங்கள் அறிக்கையிடலை மேற்கொள்ளும் வேளை இயற்கையாக இடம்பெறுகின்றது. எனினும் நீங்கள் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றில் பணியாற்றும் வேளை உயர்வான நமபத்தன்மை மற்றும் தொடர்பு என்பவற்றைக் கொண்ட மூலங்களின் வலையமைப்பு ஒன்றை உருவாக்குவதில் முன்யோசனையுடன் நடந்து கொள்ள வேண்டும். உங்களின் சக ஊடகவியலாளர்களை இது தொடர்பில் புறக்கணிக்காதீர்கள்; அவர்களிடம் பெறுமதி மிக்க தனிப்பட்ட தொடர்புகள் இருக்கக் கூடும், எனினும் செய்திக்கான போட்டி கடுமையானதாக இருக்கும் வேளை நீங்கள் செய்தி விபரங்களை பகிர விரும்பாமல் இருக்கக் கூடும்.
உங்களது செய்தி விடயத்துடன் பிரசித்தமாக தொடர்புகளைக் கொண்ட நபர்களையும் உங்களால் தேட முடியும். விளையாட்டுக் கழகங்கள், மத அமைப்புகள் அல்லது நன்கொடை அமைப்புகள் போன்ற நிறுவனங்களை கருத்தில் கொள்ளுங்கள். அவ்வாறான நபர்கள் விடயதானத்துடன் சில வகை உறவுகளைக் கொண்டிருப்பதன் காரணமாக அவன் அல்லது அவள் விடயதானத்தினை நோக்கிய விழுமியம் அல்லது மன நிலையைக் கொண்டிருக்கக் கூடும். உங்களது விசாரணைகளில் இந்த விடயத்தையும் காரணிப்படுத்துங்கள். விடயதானத்துடன் முன்னர் தொடர்புபட்டிருந்த நபர்களைத் தேடுங்கள்: வியாபாரத்தின் முன்னாள் பங்காளர்கள், முன்னை நாள் வாழ்க்கைத் துணைகள், வைத்தியர்கள், ஆசிரியர்கள் அல்லது முன்னை நாள் பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் இவ்வாறு தொடர்பு பட்டிருக்கக்கூடும். விடயதானம் அல்லது விடயதான நபருடன் பிரசித்தமான பிணக்கை அல்லது சட்டச் சிக்கலைக் கொண்டிருந்தவர்கள் மிகவும் முக்கிய சாட்சிகளாக அமையக் கூடும். எனினும், அவர்களின் உணர்வுகள் மற்றும் மனப்பாங்குகள் அவர்கள் உங்களுக்கு சொல்லும் விடயங்களில் தாக்கங்களைக் கொண்டிருக்கலாம் என்பதை மீண்டும் நினைவில் கொள்ளுங்கள். அபிவிருத்தி ஆய்வாளரான ஜோ ஹன்லோன் இதனை “விடயத்தை அறிந்த பெண்ணைக் கண்டு பிடித்தல்” என அழைக்கிறார்.