1.2. பந்தி எழுதுதல்


ஒவ்வொரு பந்தியும் சிறியதொரு செய்தியாகும். பந்திகள் உங்களது ஒட்டு மொத்த புலனாய்வின் ஒரு விடயத்தை எடுத்து அதை முற்று முழுதாக ஆராய்கின்றன. அத்துடன் பெரிய மையக்கருத்தை வாசகர்களால் எடுத்துக் கொள்ளக் கூடிய வகையில் பகுதிகளாக உடைக்கின்றன. பந்திகள் ஒவ்வொன்றும் ஒரு தலைப்பு வசனத்துடன் ஆரம்பமாகின்றன. அது வாசகர்கள் நீங்கள் என்ன விடயத்தைக் கையாளுகிறீர்கள் எனக் கூறும். அத்துடன் நீங்கள் முதலில் விபரித்த விடயத்துடன் எவ்வாறு இணைந்துள்ளது எனவும் கூறும். அதன் பின்னர் ஒவ்வொரு பந்தியும் பின்வரும் விடயங்களை வழங்க வேண்டும்:

           (a) சான்றுகள் (விபரங்கள், கூற்றுகள், உண்மைகள் மற்றும் வடிவங்கள்)

           (b) வரைவிலக்கணங்கள் அல்லது பொருள் விளக்கங்கள்

           (c) சூழமைவு, வரலாறு, ஒப்பீடுகள் அல்லது வேறுபாடுகள்

           (d) காரணம் அல்லது விளைவு

           (e) ஆதரிக்கும் அல்லது எதிர்க்கும் விவாதங்கள்

           (f)  பகுப்பாய்வு அல்லது பரிந்துரைக்கப்படும் பின் விளைவுகள்

தினசரி செய்திப் பத்திரிகைகளில் பணிபுரியும் நிருபர்கள் அடிக்கடி செய்தி எழுதுவதில் தாம் சிறுவயதில் பின்பற்றிய செய்திகளை திட்டமிட்டு பந்திகளில் எழுதும் பழக்கத்தை அடிக்கடி மறந்து விடுகின்றனர். இதன் காரணம் யாதெனில் செய்திப் பத்திரிகைகள் அரிதாகவே செய்திகளை அதன் உண்மையான பந்தி வடிவில் அச்சிடுகின்றன. உப செய்தி ஆசிரியர்கள் மேலதிக வரிகளைச் சேர்க்கும் நோக்கில் பந்திகளை உடைக்கவோ அல்லது இடத்தைச் சேமிக்கும் வகையில் பந்திகளை ஒன்றாக இணைப்பதையோ மேற்கொள்கின்றனர். நீங்கள் அது தொடர்பில் கவலையடைய வேண்டாம். பந்திகள் என்பன எந்த ஒரு செய்திக்கும் மிகவும் அவசியமான கட்டுமான அலகுகளாகும். நீங்கள் திட்டமிட்டு பந்திகளில் செய்திகளை எழுதுங்கள், பின்னரான வடிவமைப்பு விடயங்களை உப செய்தி ஆசிரியரின் பொறுப்பில் விட்டு விடுங்கள்.