1.3. வரைவு (Draft) மற்றும் மீள யோசித்தல்


இந்தக் கட்டத்தில் நீங்கள் உங்களது அனைத்து ஆவணங்களையும் சூழ்நிலைக் காட்சிகளாக வகை பிரித்திருப்பீர்கள். அத்துடன் அனைத்து கூற்று ஆவணங்கள் மற்றும் ஆய்வுத் தகவல்களை தொகுத்திருப்பீர்கள். தற்பொழுது உங்களது முதலாவது வரைவை எழுத வேண்டிய நேரமாகும். அதிகமான மக்கள் முதலாவது வரைவின் நோக்கத்தை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்; அது இறுதியாக வெளிவரும் செய்தி போல் முழுமையானது அல்ல, ஆனால் ஒரு பருமட்டான படம். அது செய்தி எவ்வாறு காணப்படும் என்பதை அறியவும் மற்றும் அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய மேலதிகப் பணிகளை அடையாளம் காணவும் உங்களை அனுமதிக்கும். இந்தக் கட்டத்தில் நீங்கள் நேர்த்தியான அறிமுகம், செம்மையான முடிவுகள் அல்லது செழுமையான மொழிப் பிரயோகம் குறித்து அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. இங்கு நீங்கள் எழுதுவதையே மேற்கொள்கிறீர்கள், தொகுத்து அமைத்தலை (edit) அல்ல. இங்கு நீங்கள் மேற்கொள்வது எல்லாம் அனைத்து ஆவணங்களையும் பக்கங்களில் இடுவதே ஆகும்.