2.2. பகுப்பாய்வு செய்தல் மற்றும் மீள் வரைவிலக்கனப்படுத்தல்


நீங்கள் மேலெழுந்த வாரியான பின்புல ஆய்வு மற்றும் அதிக எண்ணிக்கையான சுவாரசியம் மிக்க தொலைபேசி நேர்காணல்களை மேற்கொண்டுள்ளீர்கள். அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய மாவட்டத்துக்கு விஜயம் செய்து சூழ்நிலையை நேரடியாகவும் கண்டு விட்டீர்கள். இதன் பின்னர் துரதிர்டவசமாக உங்களது எடுகோளை மாற்றவேண்டி உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் உங்களது செய்தியை கிடைக்கப்பெற்ற புதிய தகவல்களின் அடிப்படையில் மீள் வரைவிலக்கணத்துக்கு உட்படுத்த ஒரு போதும் தயங்க வேண்டாம். நெகிழ்வுத்தன்மை என்பது ஒரு சிறந்த புலனாய்வை மேற்கொள்வதற்கு மிகவும் அவசியமான கொள்கைகளில் ஒன்றாகும். உங்களது ஆரம்ப யோசனையில் தங்கி இருந்து கொண்டு புதிய யதார்த்தங்களை அதனுடன் ஒன்றிணைக்க முயற்சிக்க வேண்டாம்.

பின்புலம் உருவாக்கப்பட்டதன் பின்னர் உங்களது ஆய்வை ஆழமாக்குவதுடன் தொடர்பற்ற விடயங்களை நீக்குவதற்கான நேரம் ஆரம்பமாகின்றது. நீங்கள் செய்து முடித்தனவற்றை நீக்குவது வலி தரக் கூடிய விடயம், எனினும் நீங்கள் அதை செய்தே ஆக வேண்டும். எனினும் பழைய குறிப்புகளை நீங்கள் கோவை ஒன்றில் இட்டு வைப்பதன் மூலம் அவை எதிர்கால செய்தி ஒன்றுக்கு பயன் மிக்கதாக அமையுமாயின் அவற்றைப் பயன்படுத்த முடியும். கருத்தாழமிக்க உத்தியோகபூர்வ கருத்துக்களை தேடுவதன் ஊடாக மிகவும் சுவாரசியம் மிக்க மூலங்கள் மற்றும் உசாத்துணைகளை மீண்டும் தேடுங்கள். நீங்கள் தேடுவது உறுதியான மற்றும் குறிப்பான சான்றுகளாகும். இந்த சான்றுகளின் மூலம் சுருக்கத்தில் உள்ள எடுகோள்கள் இடமாற்றம் செய்யப்படலாம். அத்துடன் இங்குதான் விடயம் பற்றிய புரிதலை உங்களால் ஆழமாக்க முடியும். நீங்கள் வழக்கொன்றை எதிகொள்ள விரும்பமாட்டீர்கள். எனவே உறுதிப்படுத்த முடியாத எவற்றையும் நீக்கி விடுங்கள். உங்களது குறிப்புகளில் உள்ள முரண்பாடான விடயங்களை நோக்குங்கள், அவை தீர்க்கப்பட முடியுமா? அவை பற்றி உங்களது பக்கச்சார்பான மூலங்கள் என்ன சொல்கின்றன? பரிசோதியுங்கள், குறுக்குப் பரிசோதனை மேற்கொள்ளுங்கள் மற்றும் மீண்டும் பரிசோதியுங்கள்.

நீங்கள் இவற்றை மேற்கொள்ளும்போது என்ன நடக்கின்றது என்பதை உங்களது செய்தி ஆசிரியருக்கு அறிவியுங்கள். இதன் மூலம் அவர் அல்லது அவள் செய்திக்கான இடத்தை மீள் திட்டமிடலுக்கு உட்படுத்தவோ அல்லது வேறொரு பக்கத்தில் இந்த வித்தியாசமான செய்தியை பிரசுரிக்கவோ உதவலாம். இதனை நீங்கள் முடிந்தளவு நேரத்துடன் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் உங்களது செய்தி ஆசிரியருக்கு நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல் அல்லது வேறு ஏதாவது சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வதன் சாத்தியம் பற்றியும் கோடிட்டுக் காட்டுங்கள். உங்கள் இருவரையும் பாதுகாக்கும் விதத்தில் உங்களது செய்தி ஆசிரியர் முற்றாக்கப்பட்ட செய்தி பற்றி ஆலோசனை பெறும் நோக்கில் வழக்கறிஞர் ஒருவருக்கு அனுப்ப வேண்டி ஏறப்டலாம்.