1. செய்திக்கரு அல்லது கதைக்கான கரு ஒன்றை எவ்வாறு கண்டறிவது?

1. செய்திக்கரு அல்லது கதைக்கான கரு ஒன்றை எவ்வாறு கண்டறிவது?


அதிகமான செய்திகள் ஊடகவியலாளர் ஒருவரின் விருப்பு மிக்க துறைகள், முந்தைய செய்தி அல்லது சமகால நிகழ்வுகள் மீது எழுப்பப்படும் வினாக்களில் இருந்தே உருவாகின்றன. நீங்கள் எங்கோ வாசித்த விடயம் ஒன்றினால் பெறப்பட்ட உந்துதல், அல்லது தனிப்பட்ட அனுபவம் அல்லது நபர் ஒருவருடன் மேற்கொள்ளப்பட்ட உரையாடல் அல்லது வேறொருவர் குறிப்பிட்ட விடயம் மூலம் இந்த உருவாக்கம் ஏற்பட முடியும். தொடர்ச்சியாக மற்றும் எல்லா நேரமும் சிறந்த செய்திக் கருக்களை உருவாக்குவது இலகுவான விடயம் அல்ல என்பதை இங்கு புரிந்து கொள்வது முக்கியமானது. ஊடகவியலாளர் ஒருவரின் பணியின் மிகக் கடினமான பகுதியாக இது காணப்படக் கூடும்.

முதலாவது, விருப்பு தொடர்பான காரணி: இளம் புலனாய்வு ஊடகவியலாளர்கள் தமது துறைசார் பயணத்தை வழிப்பாதை ஒன்றில் இருள் சூழ்ந்த நேரத்தில் இரகசியமான ஆவணங்களுடன் ஒருவர் தம்மை அணுகவுள்ளார் போன்ற கனவுடன் அனேகமாக ஆரம்பிப்பதுண்டு. ஆவணங்களின் உள்ளடக்கம் நோக்கப்பட்டதன் பின் அதன் மூலம் உருவாக்கப்பட்ட செய்தி முன் பக்கத்தில் வெளியாகின்றது, அனைத்தும் சரியாகச் செல்லுமாயின் அது பற்றிய உள்ளடக்கத்தின் ஒரு பகுதி தடித்த எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருக்கும். இதனைத் தொடர்ந்து புகழ் மற்றும் பரிசுகள் கிடைக்கும். சில வேளைகளில் இந்த கனவு போலவே விடயங்கள் நிஜத்தில் நிகழ்வதுமுண்டு. வாட்டர் கேட் ஊழல் பற்றிய செய்தி இனந்தெரியாத நபர் ஒருவரின் துணுக்குத் தகவல் மூலம் ஆரம்பித்து ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சனின் இராஜினாமாவில் முடிவடைந்தது. எனினும் பொதுவாக அரசியல் ஊழல் பற்றிய இனந்தெரியாத தொலைபேசி அழைப்புகள் அல்லது அதி இரகசிய ஆவணங்கள் போன்றன மிகவும் அரிதானவை. அத்துடன் மிகவும் நன்றாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியன ஆகும். வாட்டர் கேட் ஊழல் அதன் பிரசித்தத் தன்மை காரணமாக மாத்திரமன்றி அதனுடன் தொடர்பு பட்ட ஊடகவியலாளர்களின் ஊக்கம் மிக்க மற்றும் பற்றுள்ள பணி காரணமாகவும் மிகவும் பிரசித்தமாக உள்ளது. அத்துடன் அது உயர்மட்ட அரசியல் துரோகம் பற்றிய சிறந்த செய்தியாகும்.

இரண்டாவது, ஊடகவியலாளர் ஒருவர் ஒருபோதும் பணியில் இருந்து இடைவேளை எடுப்பதில்லை. அவர் பணிக்கு செல்லும் வேளையில் கூட அடைப்புள்ள காண்கள், கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகத்தில் காணப்படும் நீண்ட மக்கள் வரிசை மற்றும் வைத்தியசாலை தாதியின் அவமதிக்கும் நடத்தை போன்றவற்றை அவதானித்துக் கொண்டே செல்வார். முதல் பார்வையிலேயே செய்திக்கரு ஒன்று கிட்டக்கூடும், அதற்கு ஒரு புலனாய்வு மற்றும் சிறிதளவு தேடல் தேவைப்படலாம். உங்களது குறிப்புப் புத்தகத்தில் செய்திக்கருவிற்கு என ஒரு பகுதி ஒன்றை ஒதுக்குங்கள். அதில் நீங்கள் காணும் அனைத்தையும் அல்லது உங்களுக்கு எழும் கேள்விகள் அனைத்தையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

மூன்றாவது, செய்திக்குரிய இடத்துக்கு சென்ற பின்னர் அல்லது மக்களுடன் பேசி விபரங்களைப் பதிவு செய்த பின்னர் கூட ஊடகவியலாளர்கள்; முன்வைக்கும் குற்றச்சாட்டு தம்மிடம் போதுமான சான்றுகள் இல்லை என்பதாகும். உங்களுக்கு ஏதாவது ஒன்று நடந்திருந்தால் அது செய்தி ஒன்றுக்கு ஆரம்பப் புள்ளியாக அமைய சாத்தியம் கூடியதாக இருக்கும். அதே வேளை பிறருக்கு அதே விடயம் நடக்கும் போது அந்த சாத்தியம் குறைவானதாகும். இங்கு காணப்படும் அனுகூலம் குறித்த விடயத்தை நீங்கள் அனுபவித்ததன் காரணமாக அது நடைபெறுவதை உங்களால் அறிய முடிகின்றது. எனவே, ஊடகவியலாளருக்கு அவர்களே அவர்களின் சிறந்த சாட்சியங்களாகும். அத்துடன் செய்தி ஒன்றை வடிவமைக்கும் போது குறித்த விடயம் தொடர்பில் முதலில் நேரடி அனுபவத்தை பெறுவதுடன் அதற்கு துணை புரியும் வகையில் விபரமான குறிப்புகள் எடுக்கப்பட வேண்டும். நினைவுகளில் ஒருபோதும் தங்கியிருக்க வேண்டாம். வினைத்திறன் மிக்க கமராவைக் கொண்ட கையடக்க தொலைபேசி ஒன்றை வைத்திருப்பது அனுகூலம் மிக்கதாகும். இது நீங்கள் காண்கின்ற காட்சிகளை கண்டவுடன் படம் பிடிக்க உதவும்.