1.1. மூலங்களை மீளாய்வு செய்தல்


மக்கள் பல்வேறு பட்ட காரணங்களுக்காக துப்புகளை உங்களிடம் கொண்டு வருவார்கள். அவற்றில் அதிகமானவற்றுக்கு புலனாய்வு ஊடகவியலுடனோ அல்லது தவறுகளை வெளிக்கொணர்வதுடனோ எந்தத் தொடர்பும் இருப்பதில்லை. இந்த உண்மை நீங்கள் மூலம் ஒன்றை அணுகும் சந்தர்ப்பத்திலும் பொருத்தமானது. தனிப்பட்ட மனக்குறைகள், சூழ்நிலைகள் அல்லது நம்பிக்கைகள் அவர்கள் உங்களிடம் சொல்லும் விடயங்களில் தாக்கங்களைக் கொண்டிருக்கக் கூடும். இது சில விடயங்களை பெருப்பித்துக் கூறவும் சில விடயங்களைக் கூறாது அமைதியாக இருக்கவும் வழிகோலும். சில மூலங்கள் உங்களுக்கு உதவ வேண்டும் என்பதில் அதீத விருப்பைக் கொண்டிருக்கும், அவை நீங்கள் கேட்க விரும்பும் விடைகளையே கூற முனையும். இவ்வாறன சில விடயங்களில் உங்களது பின்புல ஆய்வு தெளிவைத் தரும்;. அவர்கள் பேசும் போது எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என அவதானிப்பது கூட உங்களுக்கு உதவக் கூடும்.

மக்கள் சிலவேளைகளில் உண்மையில் தவறிழைப்பதுடன் விபரங்களை மறந்திருக்கக் கூடும். இந்த இரண்டு காரணங்களுக்காகவும் அனைத்தையும் சுயாதீனமான மூன்றாவது மூலம் ஒன்றினூடாக உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். ஒன்றில் இருந்து மற்றொன்று பெறப்படாத இரண்டு மூலங்களில் இருந்து பெறப்படும் சான்றுகள் ஒரே பாதையையே சுட்டிக் காட்ட வேண்டும் (எனினும் அரிதாகவே இது இடம்பெறும்). இரண்டாவது மூலத்தை கண்டறிய முடியாத நிலையில் அல்லது அதற்குரிய நேர அவகாசம் இல்லாத நிலையில் நீங்கள் உங்களது வாசகர்களுக்கு “அந்தக் கூற்றை உறுதி செய்ய முடியவில்லை” எனக் கூற வேண்டி ஏற்படலாம். அதிக எண்ணிக்கையான உறுதிப்படுத்தப்படாத கூற்றுகள் மற்றும் கோரல்கள் புலனாய்வு ஊடகவியலாளராக உங்களது நேர்மையை விட்டுக் கொடுக்க வேண்டி ஏற்படுவதுடன் செய்தி நலிவானதாக அமையவும் காரணமாகலாம்.

எனினும் உங்களது இரண்டாவது மூலம் உறுதிப்படுத்துவதை விடுத்து முரண்பாடான தகல்களைத் தருமாயின், இந்த சந்தர்ப்பத்தில் இரண்டு நிலைப்பாடுகளையும் உங்களது வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அல்லது அவற்றுக் இடையான முரண்பாடுகளை உங்களது செய்தியில் இணைக்க வேண்டும். “உள்ளக அமைச்சு ஆயுததாரிகள் எல்லையைக் கடந்து வந்துள்ளனர் என்று கூறியது, எனினும் பாதுகாப்பு அமைச்சு அவர்கள் ஆயுதங்கள் இன்றியே வந்துள்ளனர் எனக் கூறுகின்றது”. சில விபரங்கள் நீங்கள் சொல்ல முயற்சிக்கும் செய்தியில் பொருந்தாத இடத்தும் நீங்கள் அவற்றை எளிதாக புறக்கணிக்க முடியாது; இங்கு உங்களது சொந்த துறைசார் தன்மை மற்றும் நம்பகத் தன்மை என்பன அபாயத்தில் உள்ளன. வேறுபடுத்தி அறியக் கூடிய பணி வரலாறு கொண்ட பிரசித்தமான ஊடகவியலாளர்கள் விரிவான தொடர்பு வலைப்பின்னல்களைக் கொண்டுள்ளனர், எனினும் சீமோர் ஹேர்ஷ் போன்றவர்கள் சிலவேளைகளில் ஒரேயொரு மூலத்தில் மாத்திரம் தங்கி இருப்பதுண்டு. எனினும் அவ்வகையான சிலரே காணப்படுகின்றனர்.

மிகவும் அடிப்படை மட்டத்தில் நீங்கள் யாருடன் உரையாடினாலும் அவன் அல்லது அவள் தன்னைப்பற்றிக் கூறும் அடையாளம் உண்மையானதுதானா என நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அவர்கள் தங்களைப் பற்றிக் கூறும் பணியிடம், முகவரி, அவர்களது குடும்ப விபரங்கள், இராணுவப் பதிவுகள், கடவுச் சீட்டு ஆளடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப் பத்திரங்களை தம்முடையது என நிரூபிக்க முடியுமா? ஒரு மூலம் குற்றம், தனிப்பட்ட க~;டங்கள், உள நோய், நிதிப் பிரச்சனைகள், வன்முறை அல்லது மோசடி வரலாறுகளைக் கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்கள் கூறும் விடயங்கள் பற்றி நீங்கள் குறிப்பாக அவதானமாக இருக்க வேண்டும். ஒரு மூலம் தகவலகளை தர மறுக்கும் சந்தர்ப்பத்தில் அவன் அல்லது அவள் தகவலை மறைப்பதற்கு அனேகமாக உறுதியான காரணங்கள் இருக்க வேண்டும், அத்துடன் நீங்கள் அவர்கள் சொல்லும் விடயங்களை நம்பலாமா இல்லையா எனத் தீர்மானிப்பதில் இந்த விடயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என நீங்கள் அறிந்தால் மாத்திரமே உங்களுக்கு கிடைப்பவற்றின் தரத்தைப் பற்றி உங்களால் அறிய முடியும். மூலம் முழுமையான விளக்கத்தை அல்லது சான்றுகளின் தொகுதி ஒன்றை வழங்குகின்றதா? உங்களால் அந்த தகவல் துண்டுகளை இணைத்து, சமமாக நம்பகத்தன்மை வாய்ந்த வகையில், வித்தியாசமான முடிவு ஒன்றுக்கு வர முடியுமா? ஓட்டைகள் எங்கே உள்ளன? மூலம் பெற்றுக் கொண்ட அனுபவம் அவன் அல்லது அவளின் சமூகம் பெற்றுக் கொண்ட அனுபவத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றதா? அது சமகால சம்பவமா, முன்னர் இடம்பெற்று விபரங்கள் தவறாக நினைவில் உள்ளனவா?