1.1. மக்களைப் பேச வைத்தல்


செய்தியின் சந்தர்ப்பங்கள் மற்றும் நோக்கம் என்பவற்றுக்கு ஏற்ப நீங்கள் தனிப்பட்ட கதை ஒன்றைச் சொல்லக் கூடிய ஒருவரின் இருப்பிடத்துக்குள் “உள்நுழைய” (அனேகமாக மக்கள் இது நாகரிகமற்ற விடயம் எனக் கருதிய போதும்) அல்லது அவருக்கு “தொலைபேசி அழைப்பை” ஏற்படுத்தலாம். நீங்கள் உரையாட விரும்பும் தகவல் மூலம் ஒன்றுடனான சந்திப்பு தொடர்ச்சியாக தடுக்கப்பட்டால், நீங்கள் குறித்த மூலத்துக்காக நீங்கள் காத்திருப்பதை அறியவைக்கும் வகையில் அந்த நபரின் அலுவலக காத்திருப்பு அறை அல்லது மண்டபத்தில் அல்லது குறித்த நபர் வருகை தருவார் என நீங்கள் அறிந்த பொது நிகழ்வு ஒன்றில் அவருக்காக காத்திருப்புகளை மேற்கொள்ளலாம். எனினும் இந்த மூலோபாயம் உங்களுக்கே பாதகமாக அமையக் கூடும். அத்தடன் நீங்கள் அவர்களை மறைந்திருந்து இலக்கு வைப்பது போல் நடக்கக் கூடாது. உங்களை எளிமையாக மற்றும் பண்பாக அறிமுகப் படுத்துவதுடன் அவர்களுடன் பேசுவதற்கான வாய்ப்பை நீங்கள் வரவேற்பதாகக் கூறுங்கள். அங்கு சந்தேகம் ஏற்படுதற்கு வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் குறித்த தகவல் மூலத்தின் வலையமைப்பில் உள்ள இடைத்தரகர் ஒருவரை கதவு திறப்பாளராகப் பயன்படுத்தலாம். கம்பனி, நிறுவனம், அரசாங்கம் அல்லது அரசுக்கு பகுதியளவில் அல்லது முழுமையாக சொந்தமான நிறுவனங்களின் நேர்காணல் வேண்டுகோள்களை ஒரு முறைசார் வகையில், வழமையாக பத்திரிகை அலுவலகம் ஊடாக மேற்கொள்ள வேண்டி ஏற்படும். அனைத்து சந்தர்ப்பங்களிலும் பண்பாக நடந்து கொள்ளுங்கள்.

ஒரு நபருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ள அல்லது அவரை சந்திக்கும் முன்னர் அனைத்து முக்கிய விடயங்களையும் உள்ளடக்கும் வகையிலான மிகவும் சுருக்கமான அறிமுக உரை ஒன்றை ஒத்திகை பார்த்துக் கொள்ளுங்கள். இந்த படிநிலையில், ஒரு ஊடகவியலாளராக அவர்களுக்கு வெளிப்படுத்த விடயம் பற்றி சிந்திக்க வேண்டும். எவ்வாறான சூழ்நிலைகளில் நீங்கள் உங்கள் தொழிலை மறைத்து வேறொரு நபராக (உதாரணமாக ஒரு விற்பனைப் பிரதிநிதி போல்) உங்களைக் காண்பிக்க வேண்டும்? நம்பக்கூடிய வகையில் அந்த வகிபாகத்தை எவ்வாறு உருவாக்குவீர்கள்?

குறித்த தகவல் மூலத்தை ஒரு பொழுது போக்கு சந்திப்பில் இருந்து உங்களை மீண்டும் தொடர்பு கொள்ளக் கூடிய நபராக எவ்வாறு மாற்றியமைப்பது என்பது தொடர்பில் திட்டமிடுங்கள். திட்டம் ஒன்றை வரைந்து கலந்துரையாட வேண்டிய விடயங்களைப் பட்டியலிடுங்கள். அந்த நபர் எதில் விருப்புக் கொண்டிருப்பார்? குறித்த தகவல் மூலத்தை அவனின் அல்லது அவளின் வேலைத் தளத்தில் உள்ள பிரச்சனைகள் பற்றிக் கலந்துரையாட எவ்வாறு ஊக்குவிப்பது? ஒரு சிரேஷ்ட சிவில் சேவையாளர் மற்றும் மதுமானச் சாலை மது கொடுப்பவர் மீதான உங்களின் அணுகுமுறைகளில் மாற்றம் காணப்படுமா? எவ்வாறான மாற்றம்? மாமூலான பணிகளில் உள்ள நபர்களின் புத்திக் கூர்மையை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். அத்துடன் அவர்கள் உங்களுடன் செலவழிக்க வேண்டிய நேர அளவு தொடர்பில் யதார்த்தத்தைப் பின்பற்றுங்கள். அமைச்சர் ஒருவரைப் பொறுத்த வரை 15 நிமிடங்கள் என்பது நீண்ட நேரம் ஆகும். எனினும் அதிர்ச்சியில் உறைந்த மனிதன் ஒருவன் பேச ஆரம்பிக்க சிலவேளைகளில் ஒரு நாள் கூடத் தேவைப்படக் கூடும்.

ஒரு தகவல் மூலம் நேர்காணல் கேள்விகளை முன்னராகவே தரும்படி கூறினால் நீங்கள் அதை நிறைவேற்ற வேண்டி ஏற்படலாம். எனினும் பொதுவாக இது சிறந்த நடைமுறை எனக் கருதப்படுவதில்லை. நீங்கள் உள்ளடக்க விரும்பும் விடயங்களின் பரந்த வரையறைகளை உங்களால் அனுப்ப முடியுமா என நோக்குங்கள். துறைசார் வல்லுனர்களுக்கு விசேடமான ஆவணங்களை தொகுக்க நேரம் தேவைப்படுவதால் அவர்களுக்கு முன்னரான கேள்விகளை அனுப்ப வேண்டிய தேவை ஏற்படலாம். ஏனைய சந்தர்ப்பங்களில் முன்னராக அனுப்பப்படும் கேள்விகள் மிகைப்படுத்தப்பட்ட மற்றும் செயற்கையான நேர்காணல்களையே கொண்டு வரும். அத்துடன் சிறந்த விபரங்களைப் பெறும் நோக்கில் தொடர்ச்சியான கேள்விகளைக் கேட்கும் உங்கள் உரிமையை பிரயோகியுங்கள்.

ஒரு தகவல் மூலம் உங்களை சந்திக்க மறுத்து விட்டு ஒரு வாக்குமூலத்தை வழங்குவதும் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த விடயத்தை உங்கள் செய்தியில் கையாள்வதற்கான மிகவும் பொருத்தமான வழிமுறை தொடர்பில் நீங்கள் உங்களது செய்தி ஆசிரியருடன் கலந்துரையாட வேண்டும். புலனாய்வு ஊடகவியலுக்கான நிலையம் (Centre for Investigative Journalism) இதற்கு BBC ஊடகம் பயன்படுத்தும் வழிமுறையை பரிந்துரை செய்கின்றது: “நாங்கள் நேர்காணல் ஒன்றுக்கான கோரிக்கையை விடுத்திருதோம் எனினும் ஒருவரும் கிடைக்கவில்லை, இருந்த போதிலும் பின்வரும் வாக்கு மூலம் எமக்கு தொலை நகல் மூலம் அனுப்பப்பட்டிருந்தது” இந்த வாசகத்தை தொடர்ந்து குறித்த வாக்குமூலம் முழுமையாகப் பிரசுரிக்கப்படும்.

உங்களது தகவல் மூலம் உங்களுடன் பேச விரும்பும் பொழுது, பொருத்தமான இடம் ஒன்றைத் தெரிவு செய்யுங்கள். ஒரு நபரின் வீடு அல்லது அலுவலகம் அவருக்கு உளவியல் ரீதியான அனுகூலத்தை வழங்குகின்றது – அது அவர்களுடைய இடத்தில்- எனினும் அது அவர்களை இலகுவாக உணர வைப்பதுடன் அவர்களை நீங்கள் சூழமைவில் நோக்க அனுமதிக்கின்றது. உங்களது அலுவலகம் உளவியல் அனுகூலத்தை வழங்கிய போதும் அவர்களுக்கு பாதுகாப்பு தொடர்பான உணர்வை வழங்குவதற்கு அது மிகவும் பொதுவான இடமாகக் காணப்படும். நேர்காணலின் தன்மை மற்றும் அது பொது இடம் ஒன்றிலா அல்லது இரகசியமான இடத்திலா வெற்றிகரமானதாக அமையும் எனச் சிந்தியுங்கள். அத்துடன் நீங்கள் உருவாக்க விரும்பும் மன நிலை மற்றும் சூழ உள்ள சத்தம் என்பவை தொடபிலும் சிந்தியுங்கள். சில வேளைகளில் சத்தம் உரையாடலை ஒலிப்பதிவு செய்வதற்கு இயலாமல் ஆக்கக் கூடும்.

முறைசார் நேர்காணல்களுக்கு அது தொடர்பான விபரங்களை தொலைபேசி அழைப்பு, மின்னஞ்சல் அல்லது தொலை நகல் மூலம் உறுதி செய்து கொள்ளுங்கள். இது பின்னர் நேர்காணலுக்கு உட்படுத்தப்படும் நபர் தான் மறந்து விட்டேன் எனக் கூறுவதைத் தடுத்து விடும். நான் உங்களை தொடர்பு கொள்வேன் என்ற செயலாளர்களின் வார்த்தைகளுக்காக காத்திருக்க வேண்டாம். பதில் ஒன்றுக்காக குறிப்பிடத் தக்க நேர அளவு காத்திருந்து விட்டு மீள அழையுங்கள். தொடர்ச்சியானவராக இருங்கள், ஆனால் தொல்லை கொடுப்பவராக இருக்க வேண்டாம்.