1.2. கேள்விகளை முன்னரே திட்டமிடல்


உங்களது நேர்காணல் பெரிய அளவில் வெற்றிகரமானதாக அமையாவிட்டாலும் உங்களுக்கு தேவையான சில தகவல்களையாவது மீளப் பெறக் கூடிய வகையில் உங்களது நேர்காணலை கட்டமையுங்கள்.

1. தயாராக்குதல் (மனிதத் தொடர்பை அல்லது பரஸ்பர இணைப்பை உருவாக்குதல்)

2. தெரிந்த உண்மைகளை உறுதி செய்தல் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்கள்

3. இலகுவான கேள்விகள்

4. கடினமான கேள்விகள்

தகவல் மூலம் விடயங்களை திறந்து பேச ஆரம்பிக்க தேவைப்படும் நேர அளவை மதிப்பிடுங்கள். எனினும் நேர்காணலின் ஆரம்ப கட்டங்களை சுருக்கமானதாகவும் இழுகுவானதாகவும் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள் – கலாச்சார மரியாதைத் தேவைகளுக்கு ஒத்திசைவாக- அத்துடன் முடிந்தளவு விரைவாக விடயத்துக்கு வாருங்கள். நீங்கள் கேட்க தேவையான தகவல்களை முதலிலும் சவால் மிக்க கேள்விகளை பின்னரும் வரும் வகையில் உங்களது நேர்காணல் ஒரு தர்க்க ரீதியான வடிவமைப்பைக் கொண்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களது கேள்விகள் தெளிவானவையாக, விடயத்தை நோக்கியதாக மற்றும் இலகுவில் புரிந்து கொள்ளக் கூடியனவாக அமைய வேண்டும். ஒன்றில் இருந்து ஒன்றைக் கட்டி எழுப்பக் கூடிய குறுகிய கேள்விகளின் குழு ஒன்று நீண்ட, தொடர்பற்ற உங்களது தகவல் மூலத்தை காணாமல் ஆக்கக் கூடிய கேள்விகளை விடச் சிறந்தது. இந்த கேள்விகளை முன்னதாகவே பயிற்சி செய்து கொள்ளுங்கள். பல பகுதிகளைக் கொண்ட கேள்விகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். உதாரணமாக் அமைச்சர் அவர்களே, விலைமனுக் கோரல் ஒழுங்கீனங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா, நீங்கள் அந்த தொடர் செயன்முறையை மேற்பார்வை செய்கின்றீர்களா, ஏன் குறித்த நபர்கள் ஒப்பந்தங்களை தொடர்ந்து பெறுகின்றனர்? இவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் ஒரு பகுதிக்கு மாத்திரம், அதுவும் தகவல் மூலம் கலந்துரையாட விரும்பும் பகுதிக்கு மாத்திரமே விடையைப் பெறுவீர்கள்.

இரட்டை எதிர்மறை (double negative) கேள்விகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்; உதாரணமாக, நீங்கள் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை எனபது உண்மையில்லையா? இவ்வாறன ஒரு கேள்வி பணத்தைப் பற்றிய அல்லது கூற்றின் உண்மைத் தன்மை பற்றிய விடையையே தரும். நீங்கள் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்பது உண்மையா? என்ற கேள்வி மிகவும் எளிமையானதும் தெளிவானதும் ஆகும். நீங்கள் பணத்தை திருப்பிக் கொடுத்தீர்களா? என்பது இன்னும் சிறந்த கேள்வியாகும்.

உறுதி செய்யும் கேள்விகளை உள்ளடக்குங்கள். இவ்வாறான கேள்விகள் உங்களுக்கு விடை தெரிந்த கேள்விகள் ஆகும். இது அடிப்படைகளை உள்ளடக்க மற்றும் உங்களது தகவல் மூலத்தின் சரிநிலைத் தன்மை (accuracy) பற்றிய உணர்வை உங்களுக்கு வழங்கும். நேர்காணலுக்கு உட்படுத்தப்படுபவர்கள் கேள்விகளின் எளிமைத் தன்மை தொடர்பில் வியப்படைந்தால் அது தொடர்பில் கவலைப்பட வேண்டாம். அது பற்றி நீங்கள் விளக்க வேண்டிய அவசியமில்லை, ஆயினும் “வாசகர்கள் இதை உங்களின் வார்த்தைகளிலேயே பெற வேண்டும், எனது வார்த்தைகளில் அல்ல” என விளக்கமளியுங்கள்.

மூடிய கேள்விகள் (வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஆம், இல்லை அல்லது ஒரு சொல் விடையை வரவழைக்கும் கேள்விகள்) மற்றும் திறந்த கேள்விகள் (தகவல் மூலத்தை தனது சொந்த யோசனைகளை விரிவாக்கம் செய்யத் தூண்டும் கேள்விகள்) பற்றி அறிந்து கொள்ளுங்கள். திறந்த மற்றும் மூடிய கேள்விகளை கலவையாகப் பயன்படுத்துங்கள் அத்துடன் மூடிய கேள்விகளை வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட இலக்குகளுக்காக (Deliberate goals) மாத்திரம் பயன்படுத்துங்கள்.